நுகர்வோர் கோர்ட்டுகளில் பதவிகளை நிரப்பக்கோரி வழக்கு
நுகர்வோர் கோர்ட்டுகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளனர்.
மதுரை,
நுகர்வோர் கோர்ட்டுகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளனர்.
மனு
மதுரையை சேர்ந்த வக்கீல் அருண்சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகம் முழுவதும் 32 நுகர்வோர் கோர்ட்டுகள் உள்ளன. நுகர்வோர் உரிமை சட்டத்தின்படி, நுகர்வோர்களுக்கு சேவை குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக வக்கீல் மூலம் நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம். தொலைத்தொடர்பு, வங்கிகள், இன்சூரன்ஸ், மின்வாரியம், மருத்துவம் என பலதரப்பட்ட துறைகளின் சேவை குறைபாடுகள் குறித்து வழக்குகளை தொடர அனுமதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நுகர்வோர் குறைதீர் கோர்ட்டில் ஒரு தலைவர், 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் நான் சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகளை தாக்கல் செய்து வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த கோர்ட்டில் தலைவர், உறுப்பினர்கள் இல்லாததால் பெரும்பாலான நாட்களில் இந்த கோர்ட்டுகள் செயல்படுவதில்லை.
உத்தரவு
இந்த பதவிகள் காலியாக உள்ள கோர்ட்டுகளுக்கு வேறு மாவட்டத்தில் பணியாற்றும் நுகர்வோர் கோர்ட்டு தலைவர், உறுப்பினர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வந்து வழக்குகளை ஒத்திவைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டிலும் ஏராளமான வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே காலியாக உள்ள நுகர்வோர் கோர்ட்டு தலைவர், உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், நுகர்வோர் கோர்ட்டுகளில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு நுகர்வோர் கோர்ட்டு தலைவர், உறுப்பினர் தேர்வுக்குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story