தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி செயல்பட தடை கோரி வழக்கு
தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி செயல்பட தடை கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த ஞானேஸ்வரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆழ்வார்தோப்பு கிராமம் அமைந்துள்ளது. எங்கள் ஊரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஏராளமான விளைநிலங்களும் உள்ளன. எங்கள் ஊரை சுற்றி ஏராளமான விலங்கினங்களும் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்துள்ளனர். இதற்காக பல இடங்களில் பள்ளம் தோண்டி மணல் உள்ளிட்ட தாதுப்பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே கோர்ட்டு உத்தரவின்பேரில் மணல் அள்ளுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் குவாரிகள் அமைக்கப்பட்டு சட்ட விரோதமாக மண் அள்ளுவது தொடர்ந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து சுரங்கத்துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story