செல்போன் கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த மாற்றுத்திறனாளிகள்
செல்போன் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்தனர்.
திண்டுக்கல்:
செல்போன் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்தனர்.
புகார் பெட்டி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்கள் மனுவை போட்டு செல்வதற்காக நேற்று புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை போட்டுச்சென்றனர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
இந்த நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட பிரதிநிதி மச்சக்காளை தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது பார்வையற்றோருக்கு அரசு செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து பார்வையற்றோர் காலனியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான செல்போன்கள் இன்று (அதாவது நேற்று) மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அதை நம்பி நாங்கள் சிரமப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வந்தோம். ஆனால் எங்களுக்கு செல்போன் தற்போது வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்றனர்.
இதனையடுத்து பேசிய போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தற்போது செல்போன்கள் வழங்க முடியாமல் இருக்கலாம். இருந்த போதிலும் உங்கள் மனுவை புகார் பெட்டியில் போட்டுச்செல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதையடுத்து மாற்றுத்திறனாளிகள் புகார் பெட்டியில் தங்களின் மனுக்களை போட்டுச்சென்றனர்.
கல்லூரி மாணவிகள்
இதைத்தொடர்ந்து நிலக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் ஒரு மனுவை போட்டனர். அந்த மனுவில், 2017-18-ம் ஆண்டில் நிலக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த போது எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மடிக்கணினி கிடைக்காததால் இணையதளத்தை பயன்படுத்தி எங்களால் கல்வி தொடர்பான தகவல்களை பெற முடியவில்லை. எனவே எங்களுக்கு விரைவில் மடிக்கணினி கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடும் நடவடிக்கை
இதேபோல் நாயுடு, நாயக்கர் உறவின்முறை நிர்வாகிகள் புகார் பெட்டியில் போட்டுச்சென்ற மனுவில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விருப்பாட்சி கோபால் நாயக்கர் சிலை வைக்க வேண்டும். திண்டுக்கல்லில் தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு கோபால் நாயக்கரின் பெயரை வைக்க வேண்டும். அரசியல் கூட்டம், யூடியூப்-ல் வீரபாண்டிய கட்டபொம்மன், மன்னர் திருமலை நாயக்கர் உள்ளிட்டவர்களை அவதூறாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story