4 மாத ஊதியம் வழங்கக்கோரி களப்பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
களப்பணியாளர்கள்
இதில், கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து களப்பணியாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு ஒழிப்புப்பணி களப்பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை எந்த மாதமும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படவே இல்லை. மேலும் கடந்த 4 மாதங்களுக்கான (செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்) ஒரு மாத ஊதியம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். வேலை செய்தும் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். தற்போது வேலையும் நிறுத்தப்பட்டுவிட்டது.
ஊதியம் வழங்க
இந்த சூழலில் நாங்கள் வருமானமும் இல்லாமல் செய்த வேலைக்கு ஊதியமும் இல்லாமல் மிகுந்த மனஉளைச்சல் அடைந்து வருகிறோம். எங்களது ஊதியம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகியபோது போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றே பதிலளிக்கின்றனர்.
மேலும் கடந்த ஆண்டை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்ட புதிய ஊதியம் ரூ.362-ம் இன்னும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு உரிய ஊதியம் வழங்க ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story