குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் கட்சி சுவரொட்டிகள் அழிக்கும் பணி தீவிரம்


குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் கட்சி சுவரொட்டிகள் அழிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 March 2021 12:06 AM IST (Updated: 2 March 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் கட்சி சுவரொட்டிகள் அழிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

குளித்தலை
கட்சி சுவரொட்டிகள் அழிப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன்படி குளித்தலை பகுதிகளில் தேர்தல் விதிகளை அமல்படுத்துவதில் நகராட்சி அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இதையொட்டி குளித்தலை பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள பாதகைகள் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்டது. 
அரசியல் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை கிழித்தல், சுவர் விளம்பரங்கள் அழித்தல், கட்சி கொடிக்கம்பங்களை அகற்றுதல், கல்வெட்டுகளை மறைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் தலைவர்கள் கட்சியினர் சார்பில் நிறுவப்பட்டுள்ள நுழைவுவாயில் வளைவுகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்கள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றை மறைக்கும் பணி உள்ளிட்ட பல பணிகள் குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமார் மேற்பார்வையில் துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது. 
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் சுவர்களில் எழுதி இருக்கும் கட்சி விளம்பரங்களை அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு அரவக்குறிச்சி புங்கம்பாடி ரோடு அருகில் கரூர் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் எழுதி இருந்த கட்சி விளம்பரங்களை பேரூராட்சி பணியாளர்கள் சுண்ணாம்பு பவுடர் கொண்டு அழித்தார்கள்.  மேலும் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள் அருகில் பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களையும் பேரூராட்சி பணியாளர்கள் சார்பில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதேபோல கிருஷ்ணராயபுரம் பகுதிகளிலும் கட்சி சுவரொட்டிகள் மற்றும் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களைகள் அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story