சிவகங்கை,
சிவகங்கையில் செயல்பட்டு வரும் மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 3 சிப்ட்களாக மொத்தம் சுமார் 2 ஆயிரத்து 500 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் அங்கு குடிநீர்,கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த கல்லூரியில் கிராமப்புற மாணவ-மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகின்றனர். கல்லூரி வாயில் அருகே பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்கள் தொலைவில் நிறுத்தப்படுவதால் அவர்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து பலமுறை கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இ்ல்லை. இந்த நிலையில் நேற்று மாணவ-மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.