விபத்தில் இறந்த 5 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள்- பொதுமக்கள் சாலை மறியல்
விபத்தில் இறந்த 5 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள்- பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மங்களமேடு:
5 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூர் புது காலனியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தனம்(வயது 55). இவர்களுக்கு பரமேஸ்வரி(27), பச்சையம்மாள்(25) என 2 மகள்கள் மற்றும் சக்திவேல்(21) என்ற மகன் இருந்தார். இதில் மூத்த மகள் பரமேஸ்வரியை அய்யலூரை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு செந்நிலா(3), தமிழ்நிலவன்(2) என 2 குழந்தைகள் உள்ளனர். பச்சையம்மாளுக்கும், கொளப்பாடியை சேர்ந்த பாண்டியனுக்கும் திருமணமாகி நந்திதா(2) என்ற மகள் இருக்கிறாள்.
இந்த நிலையில் கர்ப்பிணியாக உள்ள பச்சையம்மாளை பார்த்து நலம் விசாரித்துவிட்டு தனம், சக்திவேல், பரமேஸ்வரி, செந்நிலா, தமிழ்நிலவன் மற்றும் நந்திதா ஆகிய 6 பேரும் ஒரே மொபட்டில் கொளப்பாடியில் இருந்து வேப்பூருக்கு புறப்பட்டு வந்தனர். கல்லங்காடு பகுதியில் எதிரே வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் பரமேஸ்வரி, செந்நிலா, நந்திதா, தனம், சக்திவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்நிலையில் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நடந்தது. ஆனால் அவர்களின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். மேலும் நேற்று மாலை வேப்பூர் பஸ் நிலையம் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தப்பியோடிய கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் கலா, குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, இறந்த சக்திவேலின் மனைவி சுமித்ராவுக்கு அரசு வேலை, தேர்தல் முடிந்த பின்னர் பெற்றுத்தரப்படும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கப்படும், என்று தாசில்தார் உறுதியளித்தார்.
போக்குவரத்து பாதிப்பு
அதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 5 பேரின் உடல்களையும் உறவினர்கள் பெற்றுச்சென்றனர். இறந்த சக்திவேலின் மனைவி சுமித்ரா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சாலை மறியலால் வேப்பூர் - பெரம்பலூர் சாலையில் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story