தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி நூதன திருட்டு
வேப்பந்தட்டை அருகே தோஷம் கழிக்க சுடுகாட்டில் சிறப்பு பூஜை செய்வதாக கூறி நூதன முறையில், பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை திருடிச்சென்ற 2 ஜோசியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பத்தட்டை:
ஜோசியம் பார்ப்பதாக...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி அன்னபாக்கியம்(வயது 22). இவரிடம் நேற்று 2 கிளி ஜோசியக்காரர்கள், ஜோசியம் பார்ப்பதாக கூறியுள்ளார். அதன்படி அவர்களிடம் அன்னபாக்கியம் ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது, அவரது குடும்பத்தில் தோஷம் உள்ளதாகவும், அதை நீக்க வேண்டும் என்றால் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச்சங்கிலியை கழற்றி சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் 2 பேரும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அன்னபாக்கியம் தான் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை ஜோசிக்காரர்களிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய அவர்கள், தனபாக்கியத்தை வீட்டிலேயே இரு, நாங்கள் சுடுகாட்டிற்கு சென்று தாலிச்சங்கிலியை வைத்து சிறப்பு பூஜை செய்து, தோஷம் கழித்து விட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு, தாலிச்சங்கிலியுடன் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
நூதன திருட்டு
நீண்ட நேரம் காத்திருந்த தனபாக்கியம், 2 பேரும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். அதை கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் கிளி ஜோசியர்களை தேடி சுடுகாட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அன்னபாக்கியம் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் தாலிச்சங்கிலியை திருடிச்சென்ற கிளி ஜோசியர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story