நெல்லையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் மோட்டார்சைக்கிள் பயணம்


நெல்லையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் மோட்டார்சைக்கிள் பயணம்
x
தினத்தந்தி 2 March 2021 1:17 AM IST (Updated: 2 March 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசாரின் மோட்டார்சைக்கிள் பயணத்தை துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

நெல்லை, மார்ச்:
நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணிக்காக செல்லும் போலீசாரின் மோட்டார் சைக்கிள் பயணத்தை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

தேர்தல்

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் நெல்லை மாநகரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பணியாக நெல்லை மாநகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் ஒவ்வொன்றிற்கும் 3 மோட்டார் சைக்கிள் வாகனங்களை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு பணி

அதன்படி நெல்லை மாநகரில் சட்டம் ஒழுங்கு பணிக்காக 23 மோட்டார் சைக்கிள் வாகனங்களும், குற்றத்தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 2 மோட்டார் சைக்கிள் வாகனம் சேர்த்து மொத்தம் 25 மோட்டார் சைக்கிள் வாகனங்களை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சுழற்சி முறையில் மாநகர போலீஸ்துறை அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் குற்றத்தடுப்பு சம்பவங்கள் ஏதும் ஏற்பட்ட தகவல் கிடைத்தவுடன் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும், மேற்கொண்டு ஏதும் உதவி மற்றும் அதிகப்படியான காவலர்கள் தேவைப்படின் தகவல் கொடுத்தவுடன் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்

இதன்படி மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு பேரணி தொடக்க விழா நேற்று நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Story