வயலில் வைத்திருந்த 600 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு


வயலில் வைத்திருந்த 600 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு
x
தினத்தந்தி 1 March 2021 7:54 PM GMT (Updated: 1 March 2021 7:54 PM GMT)

பெரம்பலூர் அருகே வயலில் வைத்திருந்த 600 கிலோ சின்ன வெங்காயத்தை மர்மநபர்கள் திருடியதோடு, கொத்தமல்லி- மக்காச்சோள மூட்டைகளையும் தூக்கிச்சென்றனர்.

பெரம்பலூர்:

சின்ன வெங்காயம்
பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 51). விவசாயியான இவர் தற்போது சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்று வருவதால் விதைப்புக்காகவும், இருப்பு வைத்திருந்து அதனை விற்கவும் திட்டமிட்டு புதுநடுவலூரில் உள்ள தனது வயலில் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து சேமித்து வைத்து இருந்தார். மேலும் கொத்தமல்லி, மக்காச்சோளம் ஆகியவற்றை மூட்டைகட்டி வைத்திருந்தார். 
நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற தர்மலிங்கம் மாலையில் வீடு திரும்பினார். பின்னர் நேற்று காலை தர்மலிங்கம் மீண்டும் வயலுக்கு சென்றார். அப்போது பட்டறை அமைத்து வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ரூ.70 ஆயிரம் மதிப்பு
இதையடுத்து, வயலில்  சேமித்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ சின்ன வெங்காயத்தை மர்மநபர்கள் திருடியதோடு, 2 மூட்டை கொத்தமல்லி, 5 மூட்டை மக்காச்சோளத்தையும் தூக்கிச்சென்றது, தெரியவந்தது. திருட்டுபோன சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மக்காச்சோளத்தின் மதிப்பு சுமார் ரூ.70 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தர்மலிங்கம் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story