கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை


கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 March 2021 2:39 AM IST (Updated: 2 March 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பனவடலிசத்திரம், மார்ச்:
பனவடலிசத்திரம் அருகே தங்கநகைக்கடன் வழங்க மறுத்ததால், தொடக்க கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடக்க கூட்டுறவு வங்கி

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், தமிழக அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வழங்கிய நபர்களை நேற்று நகைக்கடன் பெற்றுக்கொள்ள வரச் சொல்லி இருந்தாக கூறப்படுகிறது. 

பொதுமக்கள் முற்றுகை

ஆனால் பொதுமக்கள் நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றபோது, தற்போது யாருக்கும் நகைக்கடன் வழங்கப்படமாட்டாது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஊத்துமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் நேரில் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முற்றுகையை கைவிட்டு கலைந்து செல்லுமாறு பொதுமக்களை அவர் அறிவுறுத்தினார். தங்களுக்கு வழங்கியுள்ள டோக்கன் படி நகைக்கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story