பெரியார் சிலை மீது காவித்துண்டு போடப்பட்டதால் பரபரப்பு


பெரியார் சிலை மீது காவித்துண்டு போடப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2021 2:40 AM IST (Updated: 2 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

ஒரத்தநாடு;
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
பெரியார் சிலைக்கு காவித்துண்டு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில், அரசு மகளிர் கல்லூரி அருகில் பெரியார் சிலை உள்ளது. நேற்று அதிகாலை இந்த சிலை மீது காவித்துண்டு போடப்பட்டு, சிலையின் தலையில் தொப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை நேரில் கண்ட திராவிடர் கழக பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
மனநலம் பாதித்த பெண்
பின்னர் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த காவித்துண்டையும், தலையில் இருந்த தொப்பியினையும் திராவிடர் கழக பிரமுகர்கள் அகற்றினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிந்து இருப்பது தங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தனர். 
இது குறித்து திராவிடர் கழக ஒரத்தநாடு நகர தலைவர் ரவிச்சந்திரன் ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், போலீசார் பெரியார் சிலையின் அருகில், வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
போலீசார் குவிப்பு
இந்த விசாரணையின் முடிவில்தான் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பெரியார் சிலை மீது காவித்துண்டை போட்டாரா? அல்லது விஷமிகள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு போடப்பட்ட சம்பவம் ஒரத்தநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story