தலைவாசல் அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல்; தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது போலீசில் புகார்


தலைவாசல் அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல்; தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 1 March 2021 9:11 PM GMT (Updated: 1 March 2021 9:11 PM GMT)

தலைவாசல் அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தலைவாசல்:
தலைவாசல் அருகே சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சுங்கச்சாவடி
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விழுப்புரம், கடலூர், சென்னை, காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கட்சியினர் வந்து கலந்து கொண்டனர். மாநாடு முடிந்ததும் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1¾ மணியளவில் தலைவாசலை அடுத்த நத்தக்கரை சுங்கச்சாவடிக்கு கட்சியினர் பலர் பஸ்சில் வந்தனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் சுங்கக்கட்டணம் கேட்டபோது தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே வாய்த்தகராறு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்
அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சியினர், சுங்க கட்டணம் கேட்ட ஊழியரை தாக்கியதாகவும், சுங்க கட்டணம் வசூலிக்கும் அறை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த கம்ப்யூட்டரையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகர், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து சுங்கச்சாவடி மேலாளர் மணிமாறன் தலைவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story