அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதியவர்கள் உற்சாகத்துடன் போட்டுக்கொண்டனர்


அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதியவர்கள் உற்சாகத்துடன் போட்டுக்கொண்டனர்
x
தினத்தந்தி 2 March 2021 2:48 AM IST (Updated: 2 March 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் முதியவர்கள் உற்சாகமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் முதியவர்கள் உற்சாகமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
2-வது கட்டமாக
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. இதன் பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இந்த நிலையில் தற்போது 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 60 வயது வரை நீரிழிவு போன்ற நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
உற்சாகமாக வந்த முதியவர்கள் 
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் உற்சாகமாக வந்து, கொரோனா தடுப்பூசி போட்டனர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண பரிசோதனை போன்றவை முடிவடைந்ததும், தடுப்பூசி போடப்பட்டு, கண்காணிப்பு அறையில் சிறிது நேரம் அமரவைத்த பின்னர், முதியவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொரோனா தடுப்பூசி போடும் பணியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கிவைத்தார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், ரத்த வங்கி டாக்டர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் 27 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நேற்று மட்டும் 353 பேருக்கு மாவட்ட முழுவதும் தடுப்பூசி  செலுத்தப்பட்டது.
மகிழ்ச்சி 
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:-
60 வயதுக்கு மேற்பட்டவா்களும், 45 வயது முதல் 60 வயது வரை நீரிழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும். முன்கள பணியாளர்களில் டாக்டர்கள், செவிலியர்கள் என பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தற்போது தான் வந்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதல் நாளான நேற்று ஏராளமான முதியவர்கள் உற்சாகமாக வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story