சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கையாளும் பயிற்சி


சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கையாளும் பயிற்சி
x
தினத்தந்தி 2 March 2021 3:42 AM IST (Updated: 2 March 2021 3:42 AM IST)
t-max-icont-min-icon

சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் பயிற்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

சேலம்:
சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் பயிற்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
தெற்கு சட்டசபை தொகுதி
சேலம் தெற்கு சட்டசபை தொகுதி மண்டல அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வதற்கான பயிற்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 229 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 69 மையங்களில் 381 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா? என மண்டல அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சி விளம்பரங்கள்
எனவே சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள 33 மண்டல அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் அரசியல் கட்சி விளம்பரங்கள், கட்சி கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியவை முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வழிகளுக்கு மாற்று வழிகளை தெரிந்து இருக்க வேண்டும்.
மண்டல அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுதல் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காதவாறு தேர்தல் பணியாற்ற வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகராட்சி என்ஜினீயர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரமேஷ்பாபு, வள்ளிதேவி, தேர்தல் துணை தாசில்தார் ஜாஸ்மின் பெனாசிர், உதவி ஆணையாளர் சண்முக வடிவேல், செயற்பொறியாளர்கள் பழனிசாமி, லலிதா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Next Story