தாராபுரத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ 5 லட்சம் வேட்டி சேலை பறிமுதல்


தாராபுரத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ 5 லட்சம்  வேட்டி சேலை பறிமுதல்
x
தினத்தந்தி 2 March 2021 4:00 AM IST (Updated: 2 March 2021 4:00 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ5 லட்சம் மதிப்புள்ள வேட்டி,சேலை மற்றும் எவர்சில்வர் தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அ தி மு க தி மு கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்:
தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ 5 லட்சம் மதிப்புள்ள வேட்டி சேலை மற்றும் எவர்சில்வர் தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அ தி மு க    தி மு க வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. 
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அ.தி.மு.க.வினர் தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வேட்டி-சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களை வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
தி மு க வினர் திரண்டனர்
இதற்கிடையில் கடந்த 2 நாட்களாக அந்த கல்லூரிக்குள் மினி டெம்போ ஒன்று சென்று வந்துள்ளது. அதேபோல நேற்று மாலையும் அந்த மினி டெம்போ கல்லூரிக்குள் சென்றதை தி.மு.க. பேரூர் கழக செயலாளர் கே.கே.துரைசாமி பார்த்தார். உடனடியாக அவர் கல்லூரி முன்பு நின்றபடி மற்ற தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து அந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அதுபோல் அ.தி.மு.க.வினரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். தி.மு.க.வினர் கல்லூரிக்குள் செல்ல முயன்றதை அ.தி.மு.க.வினர் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 
பறக்கும் படையினர் சோதனை
இது பற்றிய தகவல் அறிந்ததும் பறக்கும் படை தாசில்தார்கள் ரவிச்சந்திரன், சந்திரா, தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் மகேந்திர வில்சன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் கட்சியினர் யாரும் கல்லூரிக்குள் செல்லக்கூடாது என்று கூறினர். அதன்பின்னர் பறக்கும்படை அதிகாரிகள் கல்லூரிக்குள் சென்று ஆய்வு நடத்தினர். 
அப்போது கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டிடத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் அங்கு 21 பண்டல்களில் வேட்டி-சேலைகள் மற்றும் எவர்சில்வர் தட்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் 4,500 சேலைகள், 1,500 வேட்டிகள் மற்றும் 1,400 எவர்சில்வர் தட்டுகள் இ்ருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். 
சீல்வைப்பு
இந்த பரிசு பொருட்கள் கடந்த 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்கள் என்றும், தேர்தலுக்கு வேட்பாளரே அறிவிக்கப்படாத நிலையில் யாருக்கும் வேட்டி-சேலை வழங்கவும் இல்லை என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை மினி டெம்போவில் ஏற்றி தாராபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்கு சீல் வைத்தனர். 
இந்த நிலையில் தி.மு.க.வினர் அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் உரிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து அங்கு கூடியிருந்த தி.மு.க.-அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story