நீலகிரி மாவட்டத்தில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
நீலகிரி மாவட்டத்தில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 10 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஊட்டி,
60 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான முதியவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை கருத்தில் கொண்டு முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை உள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி நீலகிரி மவாட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விலையில்லாமல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்கள் அரை மணிநேரம் கண்காணிப்பு அறையில் வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி கூறியதாவது:-
10 தனியார் ஆஸ்பத்திரிகள்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யாமலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட வரும்போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தலா 2, குன்னூரில் 4 ஆகிய 10 தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அங்கு போட ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story