மாயமானவர் வழக்கில் திடீர் திருப்பம்; பணம் கேட்டு தொந்தரவு செய்த காவலாளி வெட்டி கொலை- தொழில் அதிபர் கைது


மாயமானவர் வழக்கில் திடீர் திருப்பம்; பணம் கேட்டு தொந்தரவு செய்த காவலாளி வெட்டி கொலை- தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 12:44 AM GMT (Updated: 2 March 2021 12:44 AM GMT)

மாயமான காவலாளி வழக்கில் திடீர் திருப்பமாக, பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

மொடக்குறிச்சி.
மாயமான காவலாளி வழக்கில் திடீர் திருப்பமாக, பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காவலாளி
 ஈரோடு அருகே உள்ள வெண்டிபாளையம் ேநதாஜி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மவுலி (வயது 25). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரை திடீரென காணவில்லை. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. 
இதைத்தொடர்ந்து மாயமானவரை கண்டுபிடிக்க ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ் மேற்பார்வையில் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர்  தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மவுலியை கொலை செய்ததாக வெண்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி பத்மநாபனிடம் வெண்டிபாளையத்தை சேர்ந்த  சரவணன் (வயது 53) என்பவர் சரண் அடைந்தார். சரண் அடைந்தவரை கிராம நிர்வாக அதிகாரி பத்மநாபன், மொடக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான   திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:- 
தொழில் அதிபர்
வெண்டிபாளையம் பவளம் வீதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நாய், கோழி, மற்றும் குதிரை பண்ணைகள் நடத்தி வந்தார். மேலும் லக்காபுரத்தில் உள்ள மது பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்து உள்ளார். 
மவுலி சிறுவயதில் இருந்தே சரவணனிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. தகாத நண்பர்கள் சேர்க்கையால் மவுலி பல்வேறு அடிதடி, கொலை முயற்சி, மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக அவர் மீது மொடக்குறிச்சி, ஈரோடு டவுன் மற்றும் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால் மவுலியை சந்திப்பதை சரவணன் தவிர்த்து வந்து உள்ளார். 
பணம் கேட்டு தகராறு 
இதற்கிடைேய லக்காபுரத்தில் உள்ள மதுபாருக்கு வரும் மவுலி குடித்துவிட்டு சரவணனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த ஒரு மாதமாக சரவணனிடம் பணம் கேட்டு மவுலி தொடர்ந்து ெகாலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு லக்காபுரம் வந்த மவுலி அங்குள்ள சரவணன் மதுபாரில் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். 
இதனால் மவுலி மீது சரவணனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சரவணன் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் சேர்ந்து சோலாரை அடுத்த பாலுசாமி நகரில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மவுலியை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 
கைது
மேற்கொண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மவுலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் கொடுத்த தகவலின் பேரில் அவருடைய நண்பர்களான ஊமையன் என்கிற சிவகுமார், பிரதாப், குணா என்கிற குணசேகரன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story