காரப்பள்ளம் சோதனை சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்து நின்ற ஒற்றை யானை


காரப்பள்ளம் சோதனை சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்து நின்ற ஒற்றை யானை
x
தினத்தந்தி 2 March 2021 6:28 AM IST (Updated: 2 March 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

காரப்பள்ளம் சோதனை சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து யானை ஒன்று காத்து நின்றது.

தாளவாடி
காரப்பள்ளம் சோதனை சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து யானை ஒன்று காத்து நின்றது.
புலிகள் காப்பகம் 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
குறிப்பாக தாளவாடியை அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. 
கரும்புகளை வீசி செல்லும்...
ஆசனூர் வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. எனவே இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் சத்தியமங்கலத்துக்கு வந்து செல்கின்றன. அளவுக்கு அதிகமாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் உள்ள தடுப்பு கம்பிக்குள் நுழைந்து செல்ல முடியாது. எனவே அதிகமாக இருக்கும் கரும்புகளை டிரைவர்கள் லாரியில் இருந்து சோதனை சாவடி பகுதியில் வீசிவிட்டு செல்வார்கள். 
தொந்தரவு செய்வதில்லை
உணவு மற்றும் தண்ணீர் தேடி  காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் உள்ள இந்த நெடுஞ்சாலையை யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் யானைகள் சோதனை சாவடி பகுதியில் வீசி செல்லும் கரும்புகளை தின்று பழகிவிட்டன. இதனால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து காட்டு யானைகள் அந்த பகுதியில் சுற்றி திரிகின்றன. 
இதில் ஆண் யானை ஒன்று தினமும் காரப்பள்ளம் சோதனை சாவடிக்கு வந்து கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்து நிற்கிறது. அவ்வாறு நிற்கும் யானையானது லாரிகளில் இருந்து கரும்புகளை வீசினால், அதை தின்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களை யானை எந்தவித தொந்தரவும் செய்வதில்லை. எனினும் டிரைவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். 
காத்திருந்த யானை
இந்த நிலையில் நேற்று அந்த ஆண் யானை காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதிக்கு வந்தது. கரும்பு லாரியை எதிர்பார்த்து நீண்ட நேரமாக அந்த யானை அங்கேயே நின்று கொண்டிருந்தது. யானையை கண்டதும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்தில் நிறுத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வனத்துறையினர் யானை எந்தவித தொந்தரவும் செய்யாமல் நிற்பதால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தாமல் மெதுவாக இயக்கி செல்லலாம் என அறிவுறுத்தினர். 

Next Story