பேரிகை அருகே காதலுக்கு எதிர்ப்பு: வாலிபர் அடித்துக்கொலை காதலியின் தந்தை கைது


பேரிகை அருகே காதலுக்கு எதிர்ப்பு: வாலிபர் அடித்துக்கொலை காதலியின் தந்தை கைது
x
தினத்தந்தி 2 March 2021 11:52 AM IST (Updated: 2 March 2021 11:55 AM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காதலியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி. நகரை சேர்ந்தவர் வசந்த் (வயது 26).  கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள காந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன் (55). இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் காய்கறி கடை நடத்தி வந்தனர். 
நாராயணன் மகள் சவுமியா (18). இவர் காய்கறி கடைக்கு வந்து செல்லும்போது வசந்துடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு நாராயணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் வசந்த், சவுமியாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். 
அடித்துக்கொலை
இதனால் ஆத்திரமடைந்த நாராயணன், வசந்தை கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து, உறவினர்களிடம் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, அவர் நேற்று அதிகாலை காந்தாரப்பள்ளிக்கு வசந்தை அழைத்து வந்தார். மேலும், வரும் வழியில் அவர்கள் 2 பேரும் மது அருந்தினர்.
பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வசந்தை அழைத்து சென்ற  நாராயணன் கல் மற்றும் கட்டையால் சரமாரியாக அவரை அடித்து உதைத்தார். இதில், வசந்த் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர், நாராயணன் பேரிகை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி சரணடைந்தார். 
 கைது
இதைத்தொடர்ந்து நாராயணனை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று கொலை செய்யப்பட்ட வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story