கடலில் 12 மணி நேரம் தத்தளித்த மீனவர் மீட்பு
படகில் இருந்து தவறி விழுந்து கடலில் 12 மணி நேரம் தத்தளித்த மீனவர் மீட்கப்பட்டார். இவருக்கு இலங்கை கடற்படையினர் ‘லைப் ஜாக்கெட்’ கொடுத்து உதவினர்.
வேதாரண்யம்:
படகில் இருந்து தவறி விழுந்து கடலில் 12 மணி நேரம் தத்தளித்த மீனவர் மீட்கப்பட்டார். இவருக்கு இலங்கை கடற்படையினர் ‘லைப் ஜாக்கெட்’ கொடுத்து உதவினர்.
படகில் இருந்து தவறி விழுந்தார்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர். கோடியக்கரையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் சின்னப்பன்(வயது 58) உள்பட 7 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது சின்னப்பன் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து விட்டார். உடனே படகில் இருந்த சக மீனவர்கள் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
‘லைப் ஜாக்கெட்’ கொடுத்தனர்
படகில் இருந்து தவறி விழுந்த சின்னப்பன் கடலில் தத்தளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடலோர காவல் படையினர், சின்னப்பன் கடலில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே அவரை தங்களது படகில் ஏறுமாறு கூறினர். ஆனால் அந்த படகில் ஏறி இலங்கைக்கு சென்றால் தன்னை சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர் அந்த படகில் ஏற மறுத்து விட்டார். இதையடுத்து இலங்கை கடற்படையினர் தங்களிடம் இருந்த ‘லைப் ஜாக்கெட்டை’ அவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
சின்னப்பன் அந்த ‘லைப் ஜாக்கெட்டை’ அணிந்து கொண்டு கடலில் மிதந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்நு கப்பலில் வந்த இந்திய கடலோர காவல் படையினர், இதை பார்த்து அவரை மீட்டு நேற்று மதியம் கோடியக்கரைக்கு அழைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு படகில் இருந்து தவறி விழுந்து 12 மணி நேரம் கடலில் தத்தளித்த தமிழக மீனவருக்கு இலங்கை கடலோர காவல்படையினர் மனிதாபிமானத்துடன் ‘லைப் ஜாக்கெட்’ கொடுத்து உதவியது மீனவர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
----------
Related Tags :
Next Story