லாரி டிரைவர் கொடுத்த தகவலால் அரியானாவில் இருந்து கொள்ளையடிக்க வந்த கும்பல் சினிமாவை மிஞ்சும் பரபரப்பு தகவல்கள்
லாரி டிரைவர் கொடுத்த தகவலால் இந்த கும்பல் அரியானாவில் இருந்து திருப்பூருக்கு கொள்ளையடிக்க வந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லாரி டிரைவர் கொடுத்த தகவலால் இந்த கும்பல் அரியானாவில் இருந்து திருப்பூருக்கு கொள்ளையடிக்க வந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதேர்ந்த கொள்ளையர்கள்
திருப்பூர் அருகே கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த 2 நாட்களில் கைது செய்தனர்.
கொள்ளையர்கள் எவ்வாறு சிக்கினார்கள்? துப்பு துலக்கியது எப்படி? என்பது தொடர்பாக தனிப்படை போலீசார் கூறியதாவது:-
ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருடும் கொள்ளை கும்பல் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் இதுபோன்று ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
ஜவுளி பண்டல்கள்
மேலும், சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள செல்போன் அழைப்பு விவரங்களையும் சேகரித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட செல்போன் எண்கள் மீது சந்தேகம் வலுத்தது. இந்தநிலையில் அந்த செல்போன் எண்கள் இருக்கும் சிக்னல் பகுதியை வைத்து கண்காணித்தபோது அவை ஈரோடு மாவட்டத்துக்குள் இருந்தது.
அதைத்தொடர்ந்து செல்போன் சிக்னல் பகுதியை வைத்து தனிப்படை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் திருநகர் காலனிக்கு விரைந்தது. அங்குள்ள ஒரு ஜவுளி குடோன் முன்பு அரியானா மாநில பதிவு எண் கொண்ட சரக்கு லாரி நின்றது. அந்த லாரி ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையது என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரி டிரைவரான அரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தை சேர்ந்த காசிம்கான் மற்றும் அவருடன் இருந்த ராகுல், ரபிக், ஷாகித், ஷாஜித், இர்சாத் ஆகியோர் சிக்கினர். இதில் காசிம்கான் அடிக்கடி அரியானாவில் இருந்து பெங்களூருவுக்கும், அங்கிருந்து ஈரோட்டுக்கும் ஜவுளி பண்டல்களை ஏற்றி வருவது வழக்கம்.
லாரி டிரைவர்
அவ்வாறு வந்து சென்றபோது கூலிபாளையம் நால்ரோட்டில் உள்ள இந்த ஏ.டி.எம். எந்திரத்தை கண்காணித்துள்ளார். இந்த மையத்தில் இரவு நேரத்தில் காவலாளி இல்லை என்பதை உறுதி செய்து அதன் விவரத்தை காசிம்கான், அரியானாவில் உள்ள தனது கூட்டாளிகளிடம் கூறியுள்ளார். தக்க நேரம் பார்த்து இந்த கும்பல் காத்திருந்தது.
இந்தநிலையில் காசிம்கான் ஜவுளி பண்டல்களை ஏற்றுவதற்கு பெங்களூருவுக்கு வந்துவிட்டு அதன்பிறகு ஈரோட்டுக்கு வர வேண்டியிருந்தது. விவரத்தை கூட்டாளிகளிடம் கூற, காசிம்கானுடன் 5 பேரும் சேர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி லாரியில் ஈரோடு வந்துள்ளனர். அதன்பிறகே ஈங்கூர் நல்லிகவுண்டம்பாளையத்தில் காரை திருடி வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து எடுத்து கொண்டு சென்று பின்னர் காரில் இருந்து லாரியில் ஏற்றி விஜயமங்கலம் அருகே சரளை என்ற இடத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். பின்னர் பணத்தை எடுத்து விட்டு நெடுஞ்சாலையோரம் எந்திரத்தை அங்கேயே வீசி சென்றுள்ளனர்.
கைத்துப்பாக்கிகள்
பின்னர் எதுவும் நடக்காதது போல் கருங்கல்பாளையத்தில் ஜவுளி குடோனில் இருந்தபோது சிக்கினார்கள். ஜவுளி பண்டலை ஏற்றி விட்டு லாரியில் இந்த கும்பல் அரியானா புறப்பட்டு சென்றால் அவர்களை பிடிப்பது மிகவும் சவாலாக அமைந்திருக்கும். அதுபோல் இந்த கும்பலிடம் நாட்டு கைத்துப்பாக்கிகள் இருந்தன. துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்கவும் இவர்கள் துணிந்தவர்கள். இந்த கும்பல் இதுபோல் எந்தெந்த பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரங்களை கொள்ளையடித்தனர் என்பது விசாரணையில் தான் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தீரன் அதிகாரம் ஒன்று என்ற சினிமாவில் வடமாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்ற லாரியில் வரும் கும்பல் தமிழகத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அதுபோல் இந்த கும்பல் ஜவுளி பண்டல்களை ஏற்ற வடமாநிலத்தில் இருந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடித்துள்ளது. சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story