சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க தனிக்குழு- மாவட்ட தேர்தல் அலுவலர்
சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க தனிக்குழு- மாவட்ட தேர்தல் அலுவலர்
முதுகுளத்தூர்
சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
கண்காணிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் அடிப்படையில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளின் மையங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக ஆய்வு செய்தார்.
தேரிருவேலி, கருமல், காக்கூர், முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், விளங்குளத்தூர், கீழத்தூவல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மொத்தம் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் தற்போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற வீதம் கூடுதலாக 278 வாக்குச்சாவடிகள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர், அவரை சார்ந்தோர் சார்பிலும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தால் அது வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளர்களின் விளம்பரங்களை கண்காணித்து அவரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது..
வாட்ஸ்-அப்
வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள், யூடியூப் போன்றவற்றில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் போன்றவற்றுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்கு கேட்டு விளம்பரம் செய்தால் அவை வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். இதனை கண்காணிப்பு குழு 24 மணி நேரமும் கண்காணிக்கும். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story