உள்ளாட்சி தேர்தலில் வாக்குரிமை கிடைக்கவில்லை: சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தயாராகும் உடுமலை பகுதி மலைவாழ் மக்கள்
சமுதாயத்திற்கு நல்லது செய்யும் நல்லவரை தேர்வு செய்யும் அற்புத திருவிழா தேர்தல். இந்த முறை இன்று நேற்று உருவானது அல்ல. பண்டைய காலத்திலேயே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமுதாயத்திற்கு நல்லது செய்யும் நல்லவரை தேர்வு செய்யும் அற்புத திருவிழா தேர்தல். இந்த முறை இன்று நேற்று உருவானது அல்ல. பண்டைய காலத்திலேயே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
குடவோலை முறை
சமுதாயத்தின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்களை குரல் வாக்கெடுப்பின் மூலமாகவே முதன்முதலாக முன்னோர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். இந்த முறையில் வெளிப்படையான தன்மை இருக்கும் என்பதால் எதிர் தரப்பினருக்கு பகையாளி ஆக வேண்டிய சூழல் வாக்களித்தவர்களுக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து வாக்களிப்பில் ரகசியம் காக்கும் குடவோலை முறை ஏற்படுத்தப்பட்டது.
இதில் தங்களுக்கு பிடித்த நபரின் பெயரை ஓலைச்சுவடியில் எழுதி குடத்தில் போடப்பட்டது. பின்னர் அதை பொது இடத்தில் வைத்து எண்ணப்பட்டு யாருடைய பெயர் அதிக அளவில் உள்ளதோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விஞ்ஞானமும், நாகரிகமும் வளர்ச்சி அடைந்த பின்பு வாக்களிக்கும் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.
மின்னணு எந்திரம்
அதன்பிறகு நீண்ட நாட்களாக இருந்து வந்த வாக்குச்சீட்டு முறையில் முடிவுகள் அறிவிப்பதற்கு காலதாமதம் ஆனது. அதுமட்டுமின்றி ஆட்கள் தேவை, எழுதுபொருள் செலவு, பணிச்சுமை, வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு மற்றும் பராமரிப்பு செலவு உள்ளிட்டவை பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட முறைதான் வாக்குப்பதிவு மின்னணு எந்திரம் ஆகும். இதனால் புதிதாக வாக்களிக்கும் படித்த இளைய தலைமுறையினர் முதல் படிப்பறிவு அற்ற மூத்த குடிமக்கள், மலைவாழ் மக்கள் வரை அனைவரும் எளிதாக வாக்களித்து வருகிறார்கள்.
உள்ளாட்சிக்கு வாக்களிக்க முடியாது
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மலையில் பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. அங்கு வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளாட்சி தேர்தலில் மட்டும் இதுவரையிலும் வழங்கப்படவில்லை. இதனால் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலமாக செயல்படுத்தப் படுகின்ற நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் அவர்களுக்கு தடங்கல்கள் இருந்து வருகிறது. இதனால் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழியில்லாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகிறார்கள்.
அதேநேரம் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதால் மலைகிராம மக்கள் உற்சாகத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அரசியல் வாதிகள் வாக்குக்கேட்டு அவர்களை தேடி செல்வது தான் அதற்கு காரணம்.
மலையில் வாக்குச்சாவடிகள்
அதேநேரம் மாவடப்பு வாக்குச்சாவடியில் குளிப்பட்டி, மாவடப்பு, புளியம்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 811 (ஆண் 388: பெண் 423) வாக்காளர்களும், கோடந்தூர் மலைவாழ் வாக்குச்சாவடியில் கோடந்தூர், வேலப்ப நாயக்கர் புதூர், ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 394 (ஆண் 189 : பெண் 205) வாக்காளர்களும், தளிஞ்சி வாக்குச்சவடியில் தளிஞ்சையைச் சேர்ந்த 397 (ஆண் 197 : பெண் 200) வாக்காளர்களும் வாக்களிக்கின்றனர்.
அதுதவிர அடிவாரப்பகுதியில் உள்ள திருமூர்த்தி நகர் மலைவாழ் வாக்குச்சாவடியில் குருமலை, தலமேடு, சேலை பூத்து, திருமூர்த்தி மலை, ஜல்லிமுத்தான்பாறை, ஈசல்தட்டு உள்ளிட்ட மலைவாழ் பகுதிகளைச் சேர்ந்த 587 (ஆண் 278 : பெண் 309) வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அமராவதி நகர் வாக்குச்சாவடியில் கரட்டுபதி இறவாளர் குடியிருப்பு மற்றும் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த சுமார் 300 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.அதன்படி 16 மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த 1168 ஆண்களும் 1251 பெண்களும் ஆக மொத்தம் 2419 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக வனப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலமாக வாக்கு பதிவு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகளால் கொண்டுசெல்லப்பட உள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
Related Tags :
Next Story