சத்துக்களை அள்ளித்தரும் சணப்பை சாகுபடி தென்னையில் ஊடுபயிராக பயிரிடும் விவசாயிகள்
பல்வேறு சத்துக்களை அள்ளித்தரக்கூடிய சணப்பை பயிரை தென்னையில் ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
போடிப்பட்டி
பல்வேறு சத்துக்களை அள்ளித்தரக்கூடிய சணப்பை பயிரை தென்னையில் ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
ரசாயன உரங்கள்
மண்ணை வளம் குறையாமல் பார்த்துக் கொண்டால் பொன்னாய் விளையும் என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால் தற்போதைய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் மண்ணுக்கு எதிரியாக உள்ளன. இதனால் மண் படிப்படியாக மலட்டுத்தன்மை அடையும் அபாயம் உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இயற்கை முறையில் மண் வளத்தை மேம்படுத்துவதில் உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பசுந்தாள் உரப்பயிர்களில் ஒன்றான சணப்பையை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-
தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து குறிப்பிட்ட பருவத்தில் மடக்கி உழும்போது நல்ல உரமாகிறது. அந்தவகையில் 90 நாள் பயிரான சணப்பையை 40 நாட்கள் வளர்ந்த நிலையில் மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்க முடியும்.
மண் வளம்
இவ்வாறு பூ பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதால் காற்றிலுள்ள நைட்ரஜன் உறிஞ்சப்பட்டு மண்ணுக்குக் கிடைக்கிறது. மேலும் இந்த செடி மக்கி மண்ணுடன் கலந்து விடுவதால் கரிம, கனிம சத்துக்கள் கிடைக்கிறது. அத்துடன் மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கசெய்கிறது. இதனால் மண்ணின் நீர் உறிஞ்சும் திறன் அதிகரித்து நல்ல மகசூல் பெற முடிகிறது. மேலும் நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுவதால் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் செலவு குறைகிறது.
தென்னை சாகுபடியில் மட்டுமல்லாமல் நெல் உள்ளிட்ட தானியப்பயிர்கள் மற்றும் அனைத்துவிதமான பயிர் சாகுபடியிலும் விதைப்புக்கு முன் இவ்வாறு மண் வளத்தை மேம்படுத்தலாம்.
தென்னையில் ஊடுபயிராக ஒரு ஏக்கரில் 20 கிலோ அளவுக்கு சணப்பு விதைகளை விதைக்கலாம். இதன் மூலம் 4 முதல் 5 டன் தழை உரத்தைப் பெற முடியும்.
சணப்பை பயிரின் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்வதால் தென்னைக்கு இடும் உரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில்லை. அத்துடன் மண் பிடிமானம் அதிகமாகி மண் அரிப்பும் தடுக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.
இவ்வாறு சத்துக்களை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் செய்யும் சணப்பை பயிரை சாகுபடிக்கு சுமார் 50 நாட்களுக்கு முன் பயிரிடுவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம்'என்று வேளாண்துறையினர் கூறினர்.
Related Tags :
Next Story