மின்னணு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கலெக்டர் தகவல்
3 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிடங்கு திறக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு கிடங்கில் சீல் அகற்றப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது 1,508 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,140 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,197 வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள் என மொத்தம் 3,845 எந்திரங்கள் உள்ளன.
3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போதுமான அளவில் எந்திரங்கள் இருக்கிறது. எந்திரங்களை முதல் கட்டமாக சரிபார்க்கும் பணி நடந்து முடிந்தது.
தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது, தாங்கள் வாக்களித்த சின்னத்தில் வாக்கு பதிவாகி உள்ளதா என்பதை சரிபார்க்கும் வசதி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயிற்சிக்காகவும் 45 எந்திரங்கள் வெளியே எடுக்கப்படுகிறது.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 15 எந்திரங்கள் என தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் கடைசி நாளன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாதுகாப்பு அறையில் வைத்துக் கொள்ளலாம்.
மீண்டும் இந்த எந்திரங்கள் சரிபார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story