கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த தனியார் நிறுவன மேலாளர் பலி


கல்லட்டி மலைப்பாதையில் விபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த தனியார் நிறுவன மேலாளர் பலி
x
தினத்தந்தி 3 March 2021 12:12 AM IST (Updated: 3 March 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் தடுப்பில் மோதிய விபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த தனியார் நிறுவன மேலாளர் பலியானார்.

ஊட்டி,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 34). இவர் தனியார் மாலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அவர் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தார். 

சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக தலைகுந்தா பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல அனுமதி இல்லை. 

இதையடுத்து அவர் அங்குள்ள ஒர்க்ஷாப்பில் தனது காரை பழுது பார்ப்பதற்காக நிறுத்தினார். மெக்கானிக் காரில் பிரேக் குறைவாக உள்ளது என்று தெரிவித்து சரி செய்தார். 

தொடர்ந்து அந்த மெக்கானிக் வெளிமாநில வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நான் உங்களது காரை கல்லட்டி வழியாக சீகூர் வரை ஓட்டி வருகிறேன். எனது மோட்டார் சைக்கிளை நீங்கள் ஓட்டி வாருங்கள் என்று கூறி உள்ளார். 

இதனை ஏற்ற நவீன்குமார் தனது குடும்பத்தினரை காரில் ஏற்றி மெக்கானிக் உடன் அனுப்பி விட்டு, பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

கல்லட்டி மலைப் பாதையை கடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட நவீன்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதை பார்த்த குடும்பத்தினர் சுற்றுலா வந்த இடத்தில் இப்படி நடந்து விட்டதே என்று கதறி அழுதனர். புதுமந்து போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் கல்லட்டி மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story