மசினகுடியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை பிடித்து மரக்கூண்டில் அடைக்க வனத்துறையினர் திட்டம்
ஊருக்குள் புகுந்த காட்டு யானையை பிடித்து மசினகுடி பகுதியில் மரக்கூண்டில் அடைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் உள்ள பொக்காபுரம், வாழைத்தோட்டம், மாவனல்லா, தொட்டிலிங்க் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானை (ரிவால்டோ) வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. மேலும் விவசாய பயிர்களை தின்றும் சேதப்படுத்தி வருகிறது.
இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சில நேரங்களில் மசினகுடி-ஊட்டி சாலையில் உலா வந்து வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசியதால், காயமடைந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல மசினகுடி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என வனத்துறையினர் எண்ணினர். மேலும் அந்த யானைக்கு சுவாச பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து நூதன முறையில் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து காட்டு யானையை பிடிக்கும் பணியை தற்காலிகமாக வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் காட்டு யானையை மசினகுடியில் இருந்து முதுமலைக்கு அழைத்து செல்வது கடினமான காரியம் என்பவதால், அந்த பகுதியிலேயே புதிதாக மரக்கூண்டு அமைத்து யானையை பிடித்து அடைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிங்காரா வனத்துறையினர் கூறும்போது, மசினகுடியில் முகாமிட்டு வரும் காட்டு யானைக்கு பொதுமக்கள் ரிவால்டோ எனப் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். ஊருக்குள் முகாமிட்டு பழகிவிட்டதால் வனத்துக்குள் செல்வதில்லை.
இதனால் பாதுகாப்பு கருதி காட்டு யானையை நூதன முறையில் முதுமலைக்கு அழைத்துச் சென்று பிடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு நிறைவேறவில்லை. இதனால் காட்டு யானை முகாமிடும் பகுதியில் மரக்கூண்டு (கரால்) அமைத்து அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணி சில தினங்களில் தொடங்கப்படும். பின்னர் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story