நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7.79 லட்சம் பறிமுதல்


நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7.79 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2021 12:43 AM IST (Updated: 3 March 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் ரூ.7.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
முட்டை வியாபாரிகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை நிலையான கண்காணிப்பு குழுவினர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாண்டியன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து நாமக்கல்லுக்கு சென்ற ஒரு மினி லாரியையும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து நாமக்கல்லுக்கு சென்ற மற்றொரு மினி லாரியையும் அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். 
அதில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வந்த மினி லாரியின் டிரைவர் பாரதியிடம் (வயது 40) ரூ.5 லட்சமும், பொன்னேரியில் இருந்து வந்த மினி லாரியின் டிரைவர் ராஜேஷிடம் (35) ரூ.65 ஆயிரமும் உரிய ஆவணமின்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.5.65 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் 2 பேரும் முட்டை வியாபாரிகள் என்பது தெரியவந்தது.
ரூ.90 ஆயிரம் பறிமுதல்
இதேபோல், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் பறக்கும் படை அதிகாரி மதியழகன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.90 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் ஆட்டோவில் இருந்த பிரபாகரன், பிரபு ஆகியோரிடம் விசாரித்தபோது, அந்த பணம் கோழி விற்பனை செய்த பணம் என்பதும், அதற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6 லட்சத்து 55 ஆயிரத்தை அதிகாரிகள், ராசிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.
அரிசி வியாபாரி
நாமக்கல் சட்டசபை தொகுதி, புதுச்சத்திரம் அருகே உள்ள ஏ.கே.சமுத்திரத்தில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி ராஜவேலு தலைமையில் போலீசார் சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில் இருந்த சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த அரிசி வியாபாரி சிலம்பரசனிடம் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 40 இருந்தது தெரியவந்தது. 
 இதையடுத்து கண்காணிப்பு குழுவினர் அதை பறிமுதல் செய்து நாமக்கல் தாசில்தார் கதிர்வேலிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ‌.7 லட்சத்து 79 ஆயிரத்து 40 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story