மரம் முறிந்து விழுந்ததில் அடுத்தடுத்து 3 மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்தன
தா.பழூரில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அடுத்தடுத்து 3 மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்தன. அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் வராததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தா.பழூர்:
மின்கம்பங்கள் அடியோடு உடைந்தன
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள பிள்ளையார்குளம் பகுதியில் இடங்கண்ணி செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகே நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் ஒருவர் வீட்டின் முன் இருந்த தென்னை மரம் ஒன்று திடீரென முறிந்து ஒரு மின் கம்பத்திற்கும், மற்றொரு மின் கம்பத்திற்கும் இடையே சென்ற மின் கம்பியின் மீது விழுந்தது.
இதில் அடுத்தடுத்து இருந்த 3 மின் கம்பங்களும் அடியோடு உடைந்து சாய்ந்து விழுந்தன.
இதனால் மின்கம்பிகள் சாலையோரம் உள்ள வீடுகளின் மீது கொடிக்கயிறு போல் விழுந்து கிடந்தது. அதுமட்டுமின்றி இடங்கண்ணி- தா.பழூர் சாலையின் குறுக்கே மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியது. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் அதிக மின் அழுத்தம் காரணமாக அருகில் உள்ள மின்மாற்றில் ஏதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். மின்கம்பிகள் விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சீரமைப்பு
இது குறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். மேலும் சாலையில் உடனடியாக தடுப்பு ஏற்படுத்தி அந்த பகுதியை யாரும் கடந்து செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினர். மின்வாரிய அதிகாரிகள் ஜெயங்கொண்டத்தில் இருந்து வரும் மின்சார இணைப்பை உடனடியாக துண்டித்தனர்.
பின்னர் அங்கு வந்த தா.பழூர் மின்வாரிய உதவி பொறியாளர் இளையராஜா தலைமையிலான ஊழியர்கள், மின்கம்பங்கள் உடைந்து விழுந்த பகுதியை தவிர தா.பழூரின் மற்ற பகுதிகளுக்கு உடனடியாக மின் வினியோகத்தை சீர் செய்தனர். மேலும் சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, உடனடியாக புதிய மின் கம்பங்களை நட்டு மாலைக்குள் மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு உடனடியாக மின் பாதையை சரி செய்த ஊழியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story