டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் தொடர்பாக பெரம்பலூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் தொடர்பாக பெரம்பலூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 March 2021 1:20 AM IST (Updated: 3 March 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் தொடர்பாக பெரம்பலூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

பெரம்பலூர்:

அதிகாரியிடம் விசாரணை
தமிழக சட்டம்- ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி 2 வார காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணை அதிகாரி முத்தரசி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், 3 கார்களில் நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகம் வந்தனர். பாலியல் புகார் தொடர்பாக அவர்கள் சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.
2½ மணி நேரம்
மேலும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், போலீசார் மற்றும் ஊழியர்கள் சிலரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 2½ மணி நேரம் நீடித்தது. விசாரணையை முடிந்த பின்னர் விசாரணை குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். விசாரணையின்போது பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டதாக தெரிகிறது.
விசாரணையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நேரடியாக கண்காணிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால், இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

Next Story