போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை
நெல்லையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
நெல்லை, மார்ச்:
நெல்லையில் தேர்தலையொட்டி பணம், பரிசு பொருட்கள் கடத்தலை தடுக்க துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
துணை ராணுவம் வருகை
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த போலீஸ் துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 15 பறக்கும் படைகள், 15 நிலையான கண்காணிப்பு குழு உள்பட மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலையில் வாகன சோதனை நடைபெற்றது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் முன்னிலையில் காரின் பின்பகுதியில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்று போலீசாரும், துணை ராணுவப்படையினரும் சோதனை நடத்தினர்.
பின்னர் போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
நெல்லை மாநகரில் தேர்தல் பணியை செம்மையாக மேற்கொள்ள 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையினர் 81 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நெல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் பதற்றமான பகுதிகள், பிரச்சினைக்குரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதுதவிர உள்ளூர் போலீசாருடன் ராணுவ படையினரும் சேர்ந்து வாகன சோதனையிலும் ஈடுபடுவார்கள். சோதனை நேரம் மற்றும் இடங்கள் அவ்வப்போது மாற்றப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படும். பணம், பரிசு பொருட்கள் கடத்தலை முற்றிலும் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். பொதுமக்களும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கலாம். மாநகர போலீஸ் சார்பில் 25 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.1 லட்சம் சிக்கியது
நேற்று காலை தனிப்பிரிவு தாசில்தார் லட்சுமி தலைமையில் பறக்கும் படையினர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டக்கரம்மாள்புரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வந்த காரில் ஒருவரிடம் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த பணம் குறித்து பறக்கும் படையினர் விசாரித்தனர்.
அப்போது நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில், தன்னுடைய மனைவிக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்த வேண்டும், அதற்காக ரூ.1 லட்சம் கொண்டு செல்வதாக தெரிவித்து உள்ளார். மேலும் இது தொடர்பாக வங்கியில் பணம் எடுக்கப்பட்டதற்கான ரசீது மற்றும் மருத்துவ சிகிச்சை விவரத்தையும் காண்பித்தார். இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் உரியவரிடம் திருப்பி கொடுத்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story