ஒரு ஊசி போட ரூ 16 கோடி செலவு அரியவகை நோயால் 8 மாத குழந்தை பாதிப்பு
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தைக்கு ஒரு ஊசி போட ரூ.16 கோடி செலவாவதால் சிகிச்சைக்கு பணமின்றி பெற்றோர் தவித்து வருகிறார்கள்.
கோவை
கோவை போத்தனூர் அம்மன்நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் அப்துல்லா, வியாபாரி. இவருடைய மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 8 மாதத்தில் ஸீஹா ஜைனப் என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தை மரபணு பாதிப்பால் ஏற்படும் அரிய வகை நோயான எஸ்.எம்.ஏ. என்ற நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, மரபணு பாதிப்பால் பிறந்தது முதல் கை, கால்கள் செயல்படாமல் அசைவின்றி உள்ளது.
இந்த குழந்தையை காப்பாற்ற மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என்றும், அமெரிக்காவில் இருந்து அதற்கான ஊசியை கொண்டு வர வேண்டும் என்பதால் அந்த ஊசி போட ரூ.16 கோடி செலவாகும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறும்போது, எங்கள் குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆனபோது கை மற்றும் கால்களை தூக்க முடியாமல் இருந்தது. தாய்ப்பால் குடிக்கும்போதும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோதுதான் இந்த நோய் இருப்பது தெரியவந்தது. ஏழ்மையில் உள்ள எங்களால் ரூ.16 கோடி செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story