வால்பாறையில் தேயிலை செடிகளில் இலைப்பேன் தாக்குதல் அதிகரிப்பு
வால்பாறையில் தேயிலை செடிகளில் இலைப்பேன் தாக்குதல் அதிகரித்து உள்ளதால், மருந்து தெளிக்கும் பணியில் எஸ்டேட் நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பணப்பயிராக விளங்கும் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு ஆகியவை பயிரிடப்பட்டு உள்ளது. இதில் குறைந்த அளவில் காபியும், ஏலக்காயும் பயிரிடப்பட்டு உள்ளது.
தேயிலை தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு நிழல் தருவதற்காகவும் மண் அரிப்பை தடுப்பதற்காகவும் சவுக்கை மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளது. இந்த மரங்களில் ஊடுபயிராக மிளகு கொடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் காபி செடிகளே பயிரிடப்பட்டது. ஆனால் காபி செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்பதால் காபி செடிகளை பிடுங்கி எடுத்து விட்டு அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய தேயிலை செடிகளை பயிரிட்டுள்ளன.
இந்த தேயிலை செடிகளை தட்பவெப்ப நிலை மாறுதலை பொறுத்து பல்வேறு வகையான நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கி வருகின்றன. அதன்படி தற்போது வால்பாறை பகுதியில் கடுமையான வெப்பமும் இரவில் குறைந்தளவு ஈரப்பதமும் கலந்த காலசூழ்நிலை நிலவுகிறது.
இதனால் தற்போது தேயிலை செடிகளை இலைப்பேன்கள் தாக்கத் தொடங்கி விட்டன. இந்த இலைப்பேன்கள் இளம் தளிர் தேயிலை இலைகளையும், கவாத்து செய்யப்பட்ட தோட்டத்தில் துளிர் விட்டு வளரக்கூடிய கொழுந்து தேயிலை இலைகளின் சாற்றையும் உறிஞ்சி டீத்தூள் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கொழுந்து தேயிலை இலைகளை சேதப்படுத்தி விடுகிறது.
இதனால் அதிகளவில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் பெரிய அளவில் உற்பத்தி இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்த இலைப்பேனை கட்டுப்படுத்த உபாசி தேயிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவுரையின் பேரில் ஒரு ஹெக்டருக்கு 750 மி.லி. குயினல்பாஸ் பூச்சி கொல்லி மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தேயிலை செடிகளின் மீது தெளித்து வருகின்றனர்.
இந்த பணிகளில் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.மேலும் கடுமையான வெப்பம் காரணமாக சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதலும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் வருகிற நாட்களில் வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story