குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிப்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2021 3:51 AM IST (Updated: 3 March 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அன்னூர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக அன்னூர் வழியாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. 

இந்த பணியின் போது கஞ்சப்பள்ளி ஊராட்சி வழியாக செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

 இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கஞ்சப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் அன்னூர்- கஞ்சப்பள்ளி பிரிவு சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் துணை தாசில்தார் நித்தியவள்ளி, வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்திபன், கஞ்சப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து உடனடியாக உடைந்த குழாய்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. முன்னதாக சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் அன்னூர்-அவினாசி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

Next Story