திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளவும், மதுபான விற்பனையை கண்காணிக்கவும் தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளவும், மதுபான விற்பனையை கண்காணிக்கவும் தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சோதனை சாவடி
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினத்தை கண்காணிக்கும் பணிக்கு மாவட்டத்தின் எல்லையில் வெளிமாநிலத்தில் இருந்து அதாவது கேரளாவில் இருந்து மதுபானம், எரிசாராயம் ஆகியவை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்கும் வகையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையினர் ஆகியோர் அமராவதி நகரில் உள்ள ஒன்பதாறு சோதனைசாவடி, சின்னார் வனத்துறை சோதனை சாவடி ஆகியவற்றில் கூடுதலாக பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் இடுக்கி தாசில்தார் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அதிகாரி
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, உடுமலை ஆர்.டி.ஓ. திருப்பூர் மாவட்ட எல்லையில் முக்கியமான பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இடுக்கி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வருவதற்கு ஒரு வழிமட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் சோதனை சாவடி அமைந்துள்ளதால் கூடுதலான சோதனை சாவடி தேவையில்லை. டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுவதை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பின்பற்ற வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் 30 சதவீதம் அதிகமாக மது விற்பனையானால் அதன் விவரங்களை காவல்துறை, வருவாய்த்துறை, தேர்தல் கண்காணிப்பு அதிகாரி ஆகியோருக்கு தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுவிலக்கு சோதனை சாவடிகளில் ஆய்வு செய்து போலி மதுபானமா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான கட்டுப்பாட்டு அறையில் மதுபானங்கள் தொடர்பான புகார்களை குறித்து கண்காணிக்க துணை மேலாளர் (கணக்கு) கார்த்திகேயன் என்பவர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 75028 30908 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அடையாள அட்டை
டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர், துணை விற்பனையாளர் மட்டுமே பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதுபானம் அதிகம் விற்பனையாகும் நேரங்களில் கடைகளின் கண்காணிப்பாளர்கள் இருக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களும் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். அதிகம் மது விற்பனையாகும் கடைகளில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். மது விற்பனை தொகையை பணபாதுகாப்பு பெட்டியில் வைக்க வேண்டும்.
21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. உதவி ஆணையாளர் (கலால்), மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கூட்டாக தணிக்கை மேற்கொள்ள வேண்டும். போலி மதுபானம், பதுக்கல் ஆகியவற்றை கண்டறியும் வகையில் ஆய்வு மேற்கொள்வது அவசியம். வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர் டோக்கன் வழங்கி மது விற்பனை செய்யாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story