பனியன் கம்பெனி காவலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
பனியன் கம்பெனி காவலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
மொடக்குறிச்சி
பனியன் கம்பெனி காவலாளி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
காவலாளி
மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மவுலி (வயது 25). இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி முதல் மவுலியை காணவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 24-ந் தேதி மவுலியின் பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மவுலியை தேடி வந்தார்கள்.
பார் உரிமையாளர் சரண்
இதற்கிடையே ஈரோடு லக்காபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் சரவணன் (53) என்பவர் வெண்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி பத்மநாபன் என்பவரிடம், தான் மேலும் 3 பேருடன் சேர்ந்து மவுலியை கொலை செய்து, காலிங்கராயன் வாய்க்காலில் பிணத்தை வீசிவிட்டதாக கூறி சரண் அடைந்தார். அவர் சரவணனை மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு சோலார் அடுத்த பாலுசாமி நகர் என்ற இடத்தில் செல்லும் காலிங்கராயன்வாய்க்காலில் மிதந்த மவுலியின் உடலை மீட்டார்கள்.
பணம் கேட்டு தகராறு
இந்தநிலையில் போலீசில் சரவணன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் ஈரோடு லக்காபுரத்தில் நடத்தி வரும் டாஸ்மாக் பாருக்கு மவுலி அடிக்கடி வருவார். என்னிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவார். கடந்த 20-ந் தேதியும் வழக்கம்போல் வந்த மவுலி என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் என்னுடைய குதிரை பண்ணையில் வேலை பார்க்கும் ஊமையன் என்கின்ற சிவகுமார் (26), பாரில் வேலை பார்க்கும் பிரதாப் (27), குணா என்கின்ற குணசேகரன் (33) ஆகியோருடன் சேர்ந்து மவுலியை கொன்று உடலை காலிங்கராயன் வாய்க்காலில் வீசிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை
இதைத்தொடர்ந்து சரவணனை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ஊமையன் என்கின்ற சிவகுமார், பிரதாப், குணா என்கின்ற குணசேகரன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடிவந்தார்கள். இந்தநிலையில் நேற்று 3 பேரையும் கைது செய்தார்கள்.
மேலும் கொலைக்கான காரணம் இதுதானா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story