சேலம் அருகே குடிபோதையில் தகராறு செய்த விவசாயி கழுத்தை நெரித்து கொலை


சேலம் அருகே குடிபோதையில் தகராறு செய்த விவசாயி கழுத்தை நெரித்து கொலை
x

அயோத்தியாப்பட்டணம் அருகே குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை, அவரது மனைவி, தாய் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றனர்.

அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே குடிபோதையில் தகராறு செய்த விவசாயியை, அவரது மனைவி, தாய் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேதகிரி (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி சித்ரா (38). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மேலும் இவர்களுடன் வேதகிரியின் தாயார் ராஜேஸ்வரி (60) என்பவரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வேதகிரிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் அடிக்கடி மனைவி மற்றும் தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர், தனக்கு இருந்த 12 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கர் நிலத்தை விற்று மதுகுடித்து அழித்ததாக கூறப்படுகிறது.
கழுத்தை நெரித்து கொலை
இதனிடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வேதகிரி, வீட்டில் இருந்த ஆடு, கோழிகளின் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் அவரிடம் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சித்ரா, ராஜேஸ்வரி ஆகியோர் துண்டால், வேதகிரியின் கழுத்தை நெரித்தனர். இதில் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
மேலும் வேதகிரிக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால், வலிப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இறுதிச்சடங்கு செய்து, உடலை தகனம் செய்ய அவர்கள் திட்டமிட்டனர். 
மனைவி, தாயிடம் விசாரணை
இதனிடையே உறவினர்கள் சிலர் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விவசாயி வேதகிரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
விவசாயி வேதகிரியை கொலை செய்த அவருடைய மனைவி சித்ரா மற்றும் தாய் ராஜேஸ்வரி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயும், மனைவியும் சேர்ந்து விவசாயியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story