கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவர் கைது


கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 3 March 2021 5:37 AM IST (Updated: 3 March 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவையில் கவரிங் நகைகளை அடகுவைத்து ஒருவர் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக ரெட்டியார்பாளையம் மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மோசடி நபரை பிடிக்க வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோ‌‌ஷ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் ஏட்டுகள் ராஜூ, சசிதரன், போலீசார் கோவிந்தன், ஹரிகரன், ஜெயகுமார், ராஜவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

ரூ.4 லட்சம் பறிமுதல் 

இந்த தனிப்படையினரின் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் சிக்கினார். அவரை சோதனை செய்தபோது, நகை வைத்திருந்தது தெரியவந்தது. அதை சோதித்து பார்த்தபோது அது கவரிங் என்பதும், அவர் திருவாரூர் தாலுகா பாறையூர் நடுத்தெருவை சேர்ந்த மாதவன் (வயது 40) என்பதும் தெரியவந்தது. அவர் புதுவையில் ரெட்டியார்பாளையம் மற்றும் ஒதியஞ்சாலை காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கவரிங் நகைகளை அடகுவைத்து மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் தற்போது சென்னை கூடுவாஞ்சேரி காமேஸ்வரி நகரில் வசிக்கிறார். அவரது வீட்டில் இருந்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் வழக்கு 

மேலும் அவர் மீது தமிழகத்தில் வில்லிவாக்கம், ஆலந்தூர், துவாக்குடி, திருவான்மியூர், செல்வபுரம், சீர்காழி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.  மோசடி மாதவனை கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ்      சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா பாராட்டினார்.

Next Story