அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு


அரசு பள்ளியில் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2021 12:12 AM GMT (Updated: 3 March 2021 12:16 AM GMT)

அரசு பள்ளியில் திடீா் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுடன் மதிய உணவை ருசித்து பார்த்தார்.

திருபுவனை, 

புதுவையில் கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா வைரசின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் தற்போது பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து நேற்று முதல் மதிய உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் திருபுவனை அருகே உள்ள கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 750 மாணவ, மாணவிகளுக்கு நேற்று மதிய உணவு பரிமாறப்பட்டது. 

அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென அங்கு ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய உணவை பார்வையிட்டார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து உணவு வாங்கி சாப்பிட்டார். உணவு சுவையாக இருப்பதாகவும், இன்னும் தரம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். சாப்பாட்டில் ஏதேனும் குறைபாடு இருந்தால்    அரசு அதிகாரி களை தொடர்பு கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

உணவு கூடத்தை  பார்வையிட்டார்

அதனைத்தொடர்ந்து கலிதீர்த்தாள்குப்பத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு உணவு தயாரித்து அனுப்பும் உணவு கூடத்தை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் செயலர் சுந்தரேசன், மதிய உணவு திட்ட துணை இயக்குனர் விஜயகுமாரி, பள்ளியின் துணை முதல்வர் சுபாஷ் சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள்    குமரவேல், அஜய் குமார், மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story