ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ.விசாரணை


ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ.விசாரணை
x
தினத்தந்தி 3 March 2021 5:29 AM GMT (Updated: 3 March 2021 5:29 AM GMT)

தனது பேச்சை மீறி குழந்தைகளை பூங்காவிற்கு கணவர் அழைத்துச் சென்றதால் மனமுடைந்த ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி, 

ஆவடி அருகே உள்ள எச்.வி.எப்.எஸ்டேட் டி.என்.பி. லைன் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 36. ) ராணுவ வீரரான இவர், ஆவடியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி வினுபிரியா (30). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் அருகில் உள்ள பூங்காவிற்கு குழந்தைகளை விளையாடுவதற்கு அழைத்துச் செல்ல முயன்றார். அதற்கு வினுபிரியா தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மனைவியின் பேச்சை மீறி சந்தோஷ்குமார் இரண்டு பிள்ளைகளையும் அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், குழந்தைகளை பூங்காவில் விட்டு நேராக வேலைக்கு சென்றுவிட்டார்.

பெண் தற்கொலை

இந்த நிலையில், செல்போனில் தனது மனைவியிடம் இருவரையும் பூங்காவில் விளையாடுவதற்காக விட்டு தான் வேலைக்கு சென்று விட்டதாகவும், அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து வினுபிரியா பூங்காவிற்கு சென்று இரண்டு பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வினுபிரியா திடீரென வீட்டில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சந்தோஷ்குமார் பார்த்த போது, மனைவி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வினுபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

Next Story