ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்
ஆண்டிப்பட்டி-தேனி இடையே ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தேனி:
மதுரை-போடி ரெயில்
மதுரையில் இருந்து போடிக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில் பாதையில் மீட்டர் கேஜ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பாதையை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிட்டு கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் இந்த ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இயக்குனர் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரெயில்' படத்தின் இறுதிக் காட்சியில் கிழக்கு நோக்கி ரெயில் போவது போன்று காட்சி இருக்கும். அந்த வகையில் போடியில் இருந்து கிழக்கு நோக்கி மதுரைக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்ற ரெயில் மீண்டும் தேனிக்கு வராமல் இருந்தது.
சோதனை ஓட்டம்
ஏற்கனவே இருந்த ரெயில் தண்டவாளங்கள் அகற்றப்பட்ட நிலையில், சில ஆண்டுகளாக ரெயில்பாதை திட்டப் பணிகள் முடங்கின.
பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கின.
முதலில் பணிகள் மந்தமாக நடந்த போதிலும் கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதனால், மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கிலோமீட்டர் தூரம் ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து முதற்கட்டமாக ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
அதைத்தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி இடையே 21 கிலோமீட்டர் தூரம் ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஆண்டிப்பட்டி வரை ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
இதையடுத்து ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோமீட்டர் தூரம் அகல ரெயில்பாதை திட்டப் பணிகள் தீவிரமாக நடந்தது. ரெயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
தண்டவாளங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் வகையில் மிகவும் மெதுவாக ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
தேனியில் பல்வேறு இடங்களிலும் ரெயில்வே தண்டவாளங்களின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று ரெயில் என்ஜினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் பெட்டிகளோடு கிழக்கு நோக்கி ரெயில் சென்ற நிலையில், விரைவில் ரெயில் வரும் என்பதற்கான நம்பிக்கை அளிக்கும் வகையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ரெயில் என்ஜின் வந்ததை பார்த்ததும் மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
என்ஜினை கண்டதும் உற்சாகத்தில் கையசைத்து சத்தம் எழுப்பினர். பலரும் விசில் அடித்து வரவேற்றனர்.
தேனி ரெயில் நிலையத்துக்கு என்ஜின் வந்தபோது பா.ஜனதா கட்சியினர், அ.தி.மு.க.வினர் மற்றும் ரெயில் பாதை திட்ட அமலாக்கக்குழுவினர் ஆகியோர் ஆங்காங்கே நின்று மலர் தூவி வரவேற்றனர்.
ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் ரெயில் என்ஜின் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் பலரும் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் அந்த ரெயில் என்ஜின் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
Related Tags :
Next Story