விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவிபேட் எந்திரங்கள் வந்தன


விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவிபேட் எந்திரங்கள் வந்தன
x
தினத்தந்தி 3 March 2021 11:00 PM IST (Updated: 3 March 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவிபேட் எந்திரங்கள் வந்தன.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் பயன்படுத்துவதற்காக தற்போது விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் மின்னணு வாக்கு எந்திரங்களான பேலட் யூனிட் 4,097 எந்திரங்களும், கண்ட்ரோல் யூனிட் 3,068 எந்திரங்களும், வாக்குப்பதிவை உறுதி செய்திடும் எந்திரங்களான வி.வி.பேட் எந்திரங்கள் 3,155-ம் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் பணிக்காக இந்திய தேர்தல் ஆணையத்தினால் வி.வி.பேட் எந்திரங்கள் 150 எண்ணிக்கையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட வி.வி.பேட் எந்திரங்கள் நேற்று காலை திருவள்ளூரில் இருந்து லாரி மூலம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்கு எந்திர சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த எந்திரங்களை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அண்ணாதுரையால், அந்த சேமிப்பு கிடங்கு அறை திறக்கப்பட்டது. பின்னர் லாரியில் இருந்து 150 எண்ணிக்கையிலான வி.வி.பேட் எந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டு அவை சேமிப்பு கிடங்கு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த வி.வி.பேட் எந்திரங்கள் மீண்டும் ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தேர்தல் நேரத்தில் பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி, காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story