தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x

இடப்பிரச்சினையால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:

தேனி அருகே உள்ள வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மாரிச்சாமி மனைவி முனியம்மாள். இவர் தனது மகள் பவித்ராவுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். 

கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் கார் நிறுத்தப்பட்ட இடத்துக்கு அவர்கள் சென்றனர். முனியம்மாள் தான் வைத்திருந்த பையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை மறைத்து கொண்டு வந்திருந்தார். 

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த பெட்ரோலை முனியம்மாள் தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் ஓடிச் சென்று அவரை தடுத்து நிறுத்தினார். 

பின்னர் மேலும் சில போலீசார் அங்கு விரைந்து வந்தனர். முனியம்மாள் மீது ஊற்றுவதற்காக தண்ணீரை போலீசார் தேடினர். ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லை.

 இதையடுத்து முனியம்மாளையும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவின் பாலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தண்ணீர் வாங்கி அவர் மீது போலீசார் ஊற்றினர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எனது கணவர் இறந்து விட்டார். எனது மாமியார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். 

எனது மாமியாரும் இறந்து விட்டதால் அந்த வீட்டை வேறு ஒரு நபருக்கு ஒத்திக்கு கொடுத்து விட்டு மதுரைக்கு சென்று விட்டோம். சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்து அதே வீட்டில் குடியிருந்து வருகிறோம். 

வீட்டுக்கு அருகில் உள்ள எங்களுக்கு சொந்தமான இடத்தை தற்போது வேறு ஒரு நபர் ஆக்கிரமித்துக் கொண்டு எங்களை மிரட்டி வருகிறார். 

இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பெட்ரோல் வாங்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தோம்" என்றார்.

இதையடுத்து அவரையும், அவருடைய மகள் பவித்ராவையும் போலீசார் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தற்கொலைக்கு முயன்றதாக முனியம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story