கூடலூர் பகுதியில் கோடை மழையால் மீண்டும் பூத்துள்ள காபி செடிகள்


கூடலூர் பகுதியில் கோடை மழையால் மீண்டும் பூத்துள்ள காபி செடிகள்
x
தினத்தந்தி 3 March 2021 11:54 PM IST (Updated: 4 March 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் பெய்த கோடை மழையால் காபி செடிகள் மீண்டும் பூத்துள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு இணையாக கூடலூர் பகுதியில் பல ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிர்கள் விளைகிறது. இதேபோல் கேரளாவின் வயநாடு, கர்நாடகா பகுதியில் காபி விளைவிக்கப்படுகிறது. 

அரபிக்கா, ரொபஸ்டா என 2 ரகங்கள் உள்ளது. கூடலூர் பகுதியில் ஆண்டுக்கு 2 முறை காபி அறுவடை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காபி அறுவடை சீசன் தொடங்கியது.

ஆனால் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் பனிப்பொழிவு மிகவும் தாமதமாக காணப்பட்டது. இதனால் அறுவடை சீசன் முடிவடைவதற்கு முன்பாகவே காபி செடிகள் அடுத்த விளைச்சலுக்காக பூக்கத் தொடங்கியது.

 மேலும் காபி பழங்களை பறிக்கும்போது பூக்களும் உதிர்ந்து வந்தது. இதனால் விளைச்சல் பாதிக்கும் நிலை காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூடலூர் பகுதியில் கோடை மழை பரவலாக பெய்தது.

இதனால் தேயிலை, காபி தோட்டங்களில் போதிய ஈரப்பதம் உண்டானது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து காபி தோட்டங்களில் உள்ள செடிகள் பூத்து காணப்படுகிறது.

மேலும் பூக்களின் மணம் கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் வீசுகிறது.  சரியான பருவத்தில் காபி செடிகள் பூத்து உள்ளதாக காபி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடும் பனிப்பொழிவால் 20 சதவீத அளவுக்கு காபி செடிகள் பூத்து இருந்தது. ஆனால் அறுவடை சீசன் என்பதாலும், மழை பெய்யாததாலும் பூக்கள் காய்ந்து கருகி விட்டது. 

கடந்த 1 வாரத்துக்கு முன்பு கூடலூர் பகுதியில் கோடை மழை பெய்தது. சரியான பருவத்தில் மழை பெய்ததால் காபி செடிகள் பூத்துள்ளது. மழை பெய்து நிலத்தில் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே பூக்கள் காயாக மாறி விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story