வால்பாறை பகுதியில் சூறாவளி காற்றால் மரக்கிளைகள் முறிந்தன


வால்பாறை பகுதியில் சூறாவளி காற்றால் மரக்கிளைகள் முறிந்தன
x
தினத்தந்தி 3 March 2021 6:36 PM GMT (Updated: 3 March 2021 6:43 PM GMT)

வால்பாறை பகுதியில் பலத்த சூறாவளி காற்றால் மரக்கிளைகள் முறிந்தன. மின்சாரமும் தடைபடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

வால்பாறை,

மலைப்பிரதேசமான வால்பாறையில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. கண்ணுக்கு எட்டிய தூரங்களில் பச்சை பசேலென காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. 

கடந்த ஆண்டில் வால்பாறை பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுபோன்று இங்கு மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் முதல்வாரத்தில்தான் வெயிலின் தாக்கம் இருக்கும்.

ஆனால் தற்போது மார்ச் மாத முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. தற்போது காலை நேரத்திலேயே வெயில் அதிகமாக இருக்கிறது. அத்துடன் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது.

இதனால் வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் இருக்கும் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததுடன், வீடுகளின் மேற்கூரைகளும் காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பறந்து வருகின்றன. 

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் சிரமத்துடன் பச்சை தேயிலையை பறித்து வருகிறார்கள். வால்பாறையின் முக்கிய சுற்றுலா மையம் என்று அழைக்கப்படும் கூழாங்கல் ஆறும் வறண்டுபோனது. 

உருளிக்கல் பெரியார் நகர், சேடல்டேம், சோலையார் நகர், ஜே.ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி சூறாவளி காற்று வீசுவதால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பி மீது விழுவதால் அடிக்கடி மின்சாரமும் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வால்பாறை பகுதியில் இந்த மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகதான் இருக்கும். ஆனால் தற்போது 30 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. கடந்த ஆண்டில் பருவமழை நன்றாக பெய்ததால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
 
மேலும் பலத்த சூறாவளி காற்று காரணமாக 100-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்தன. பலரின் வீட்டு கூரைகளும் பறந்தன. இந்த காலநிலை மாற்றம் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story