தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா


தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 March 2021 7:20 PM GMT (Updated: 3 March 2021 7:20 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

பெரம்பலூர்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 36 துறைகளைச் சேர்ந்த 4,323 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சங்கர் மற்றும் தேர்தல் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று ஒரேநாளில் 45-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா கூறுகையில், வருகிற 6-ந் தேதி வரை 3 நாட்கள் பெரம்பலூர், அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், வேப்பந்தட்டை வட்டார வள மையம், வாலிகண்டபுரம் அரசு சுகாதார மையம், நெற்குணம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், பாடாலூர், சிறுவாச்சூர், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.  வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளி, நக்கசேலம், கொளக்காநத்தம் வேப்பூர், துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் அந்தந்த மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரங்களில் 3 நாட்கள் நடைபெறும். இந்த முகாம்களில் மருத்துவக் குழு மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story