பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விழா நடந்தது.
பேட்டை, மார்ச்:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் பல்கலைக்கழகத்தில் நடந்தது. துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பதிவாளர் (பொறுப்பு) மருது குட்டி வாழ்த்தி பேசினார். பெண்கள் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும், நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான கிறிஸ்டின் மேரி வரவேற்று பேசினார். 2019-20 கல்வியாண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளின் ஆண்டறிக்கையை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் டேனியல் பேரின்பராஜ் வாசித்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரியும், 2-ம் இடத்தை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியும், 3-வது இடத்தை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியும், 4-வது இடத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியும் பிடித்தது.
பெண்கள் பிரிவில் முதலிடத்தை தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியும், 2-வது இடத்தை குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியும், 3-வது இடத்தை நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியும், 4-வது இடத்தை தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி பெண்கள் கல்லூரியும் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பரிசுக் கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் துரை நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆண்கள் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி வ.உ சிதம்பரனார் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான சிவஞானம் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story