திருப்பூர் அருகே குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு


திருப்பூர் அருகே குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 March 2021 1:31 AM IST (Updated: 4 March 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

நல்லூர்:-
திருப்பூர் அருகே குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி மேற்கு பகுதியில்  புதுபிள்ளையார் நகர் உள்ளது. அந்தப்பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில்  சிறுவர் பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அல்லது வழிபாட்டுத்தலம் அமைக்க அப்பகுதியினர் முடிவு செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்த இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர்தொட்டியை அமைக்க திட்டமிட்டனர். இதற்காக கடந்த ஆண்டு அங்கு குழி தோண்டப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பியும், சென்னை நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி கட்டும்  பணியை தொடங்க அதிகாரிகள் பார்வையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழி தோண்டப்பட்ட இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
பின்னர் இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 
அதிகாரிகள் உதவ வேண்டும்
 கார்த்திக் நகர் பகுதியில் அமைக்க இருந்த நீர் தேக்க தொட்டியை எங்கள் பகுதி அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எங்கள் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட இரண்டு மேல் நிலை தொட்டிகள் உள்ளது. அதில் ஒன்று மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
 இந்த நிலையில் மீண்டும் நீர் தேக்க தொட்டி அமைக்க உள்ளனர். எனவே நீர் தேக்க தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். அந்த இடத்தில் சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு மைதானம், தொடக்க பள்ளி, அல்லது ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் (மண்டபம்) அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரிகள் உதவ முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story