சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 2¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சி செம்பட்டு சோதனை சாவடியில் சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 2¾ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செம்பட்டு,
திருச்சி செம்பட்டு சோதனை சாவடியில் சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 2¾ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திருச்சி செம்பட்டு பகுதியில் புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்குவாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், சரக்கு வாகனத்தில் 55 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2¾ டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதைத்தொடர்ந்து சரக்கு வாகன டிரைவரான திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சிறுகாம்பூர் பகுதியில் இருந்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனத்தில் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் சரக்குவாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன், தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story